மணிப்பூரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய அதிகாரிகள் மீது கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கியால் சுட்டதில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளர்ச்சியாளர்களை நோக்கி, காவல் துறையினரும், பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், அவர்கள் காட்டுக்குள் பதுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் காவல் துறையினருடன், மத்திய பாதுகாப்புப் படை வீரர்களும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். ஜிரிபாம் மாவட்ட அஸ்ஸாம் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் ரோந்து காரை நிறுத்திவிட்டு, பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் நடந்து சென்றுள்ளார்.
அப்போது மறைந்திருந்த கிளர்ச்சியாளர்கள், பாதுகாப்புப் படை வீரரின் ரோந்து வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், காருக்கு வெளியே இருந்த பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார்.
காரின் கதவுகளில் குண்டுகள் துளைத்ததில், காரில் இருந்த காவலர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பேசிய காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர், காவல் துறை வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டவர்களை பிடிக்கும் நோக்கில் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. எனினும், அவர்கள் தப்பியோடி அஸ்ஸாம் எல்லையோரம் இருந்த காட்டில் பதுங்கிவிட்டனர் எனக் குறிப்பிட்டார்.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 220 கி.மீ. தொலைவில் இச்சம்பவம் நடைபெற்றது.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதலே மைதேயி – குகி சமூகத்தினரிடையே வன்முறை நீடித்து வருகிறது. இதனால் மணிப்பூரில் பல இடங்களில் பதற்றம் நிலவுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஓராண்டாக அஸ்ஸாம் எல்லையோரம் இருந்த ஜிரிபாம் மாவட்டத்தில் வன்முறை சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை. எனினும் தற்போது, அங்கு உள்ள மக்கள் அரசுக்கு எதிராக வருகின்றனர். முகாம்களில் தங்குவதற்கு மறுப்பு தெரிவித்து அவர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை வாகனத்தின் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Leave feedback about this