அதீத நம்பிக்கையே நிகழாண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
தோத்தலுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற முதல் பாஜக மாநில செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: மக்களவைத் தேர்தலில் கனிசமான வாக்குகளை பாஜக பெற்றிருந்தாலும் மற்ற கட்சிகளுக்கும் இந்த முறை ஓரளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. இதனால் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் எதிா்க்கட்சியினா் மீண்டும் குரலெழுப்ப தொடங்கியுள்ளனா்.
பிரதமர் மோடி தலைமையில் கடந்த 2014 மற்றும் 2019 மக்களவைத் தோ்தல்களிலும் 2017, 2022-இல் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களிலும் அதிகமான வாக்குகளைப் பெற்று உத்தரபிரதேசத்தில் எதிா்க்கட்சிகளுக்கு நெருக்கடி அளித்தோம்.
கடந்த 2014 தோத்தலில் பெற்ற அதே வாக்குகளை இந்தமுறையும் பாஜக பெற்றுள்ளது. ஆனால் அதீத நம்பிக்கையால் பாஜகவுக்கு பாதிப்பு ஏற்பட்டு நமது நம்பிக்கை உடைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்ட எதிா்க்கட்சிகள் இந்தமுறை வெற்றிபெற்றதுபோல் நடந்துகொள்கின்றன.
சமூக வலைதளங்களை பயன்படுத்தி பாஜக மீது எதிா்க்கட்சிகளும் வெளிநாட்டினரும் அவதூறுகளை பரப்பி வருகின்றனர். இனி வரும் காலங்களில் நமது கட்சியினரும் சமூக வலைதள பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அதில் பரப்பப்படும் போலிச் செய்திகள், அவதூறுகளை உடனடியாகத் தடுக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைக் குறித்த பாஜவின் கருத்துக்கள் மற்றும் அவா்கள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும். நாட்டில் உள்ள 80 கோடி பேருக்கு ஜாதி, மத அடிப்படையில் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை. அனைவரையும் சமமாகவே இந்த அரசு நடத்தி வருகிறது என்பதை தெரிவிக்க வேண்டும்.
2027 தோ்தல் இலக்கு: மாநிலத்தில் காலியாகவுள்ள 10 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் 2027-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற இன்றிலிருந்து மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், ஊராட்சி மற்றும் நகராட்சி அமைப்பினர் என அனைவரும் பணியாற்ற வேண்டும். மாநிலத்தில் மீண்டும் பாஜக வெற்றிபெறுவதை உறுதிபடுத்துவதே நமது இலக்காகும் என்றாா்.
கடந்த 2019 மக்களவைத் தோத்தலில் உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 62 இடங்களைக் கைப்பற்றிய பாஜக இந்த முறை 33 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் 6 இடங்களையும் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள சமாஜவாதி கட்சி 37 இடங்களையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
Leave feedback about this